சுவாமி ஞானப்பிரகாசரின் 132 ஆவது பிறந்த தினம்

சுவாமி ஞானப்பிரகாசரின் 132 ஆவது பிறந்த தினம் இன்று வியாழக்கிழமையாகும் . நற்றமிழ் வித்தகர், தமிழ் கூறும் நல்லுலகம் பெற்ற அருந்தவப் புதல்வர், பன்மொழிப் புலவர் சுவாமி ஞானப்பிரகாசரின் 132 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழின் தொன்மையை உலகிற்கு எடுத்தியம்பியவர். வளம் மிக்க ஒரு சந்ததியை உருவாக்கும் விதத்தில் அறிவுபூர்வமான நூல்களை எழுதிய அத்தமிழ் பெரியார் அன்னை தமிழுக்கு செய்த தொண்டு அளப்பரியதாகும்

இவர் யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்த மன்னர்களுள் ஒருவரான 6 ஆவது பரராஜசேகரனின் பரம்பரையைச் சேர்ந்தவரான இராசலிங்கம் சாமிநாதப் பிள்ளை, தங்கமுத்து தம்பதியினரின் மகனாக 30.08.1875 அன்று பிறந்தார். இவரது இயற்பெயர் வைத்தியலிங்கம்.அச்சுவேலியில் அமைந்திருந்த அமெரிக்க மிஷன் ஆங்கில பாடசாலையொன்றில் ஆரம்ப கல்வியைக் கற்ற அவர்இ யாழ் புனித பத்தரிசியார் கல்லூரியில் கல்வி பயின்றார்.1893 இல் புகையிரதப் பகுதியில் இலிகிதர் பரீட்சையில் முதலாவதாக தேறி கடிகமுகவயிலும் பின்னர் கொழும்பிலும் 3 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் 1895 ஆம் ஆண்டு இறைபணிக்கென தம்மை அர்ப்பணித்து யாழ். குரு மடத்தில் சேர்ந்துகொண்டார். 01.12.1901 அன்று குருவானவராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

இறையர்ப்பணிப்பு சேவையில் முதல் பங்காக ஊர்காவற்றுறையில் பணியாற்றினார். முதன் முறையாக அங்கு நூல் நிலையம் ஒன்றை உருவாக்கி மக்கள் மத்தியில் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தினார். வேதநூல்களை இரவலாகக் கொடுத்து மீண்டும் பெற்றுக் கொள்ளும் நடைமுறையை செயல்படுத்தினார். 50 இற்கும் மேற்பட்ட நூல்களை தாமே இயற்றி 30 இக்கும் மேற்பட்ட நூல்களை அச்சேற்றினார். 'ஞான உணர்ச்சி' எனும் நூல் வீரமாமுனிவரால் எழுதப்பட்டதல்ல சாங்கோபாங்க சுவாமிகளே எழுதினார் என இடித்துரைத்தார். நல்லூரில் புனித சவேரியார் ஆலயத்தை கட்டியெழுப்பி பல ஆண்டுகள் பணியாற்றினார். அதனால் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் என அழைக்கப்படலானார்

யாழ்ப்பாண வைபவமாலையில் தாம் கண்ட சரித்திர முரண்பாடுகளை யாழ்ப்பாண வைபவ விமரிசனம் என்னும் நூலில் எடுத்துக் காட்டினார்.புலவர் சுவாமி ஞானப்பிரகாசர் 22.01.1947 ஆம் ஆண்டு தனது 72 ஆம் வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை பெற்று இறைவனின் திருப்பாதம் சரணடைந்தார். அவரின் தமிழ் தொண்டைப் பாராட்டி தமிழ் நாட்டின் அறிவுக் களஞ்சியங்களாக விளங்கிவரும் ஆதீனங்களில் ஒன்றாகிய திருப்பணந்தாள் மடம்இஅவரை கௌரவித்து சன்மானமும் வழங்கியது. ஜேர்மனி அரசாங்கம் 1939 ஆம் ஆண்டும்இஎமது இலங்கை அரசாங்கம் 22.05.1981 ஆம் ஆண்டும் நினைவு முத்திரைகள் வெளியிட்டு கௌரவித்தன. உலகின் தொன்மைமிகு மொழியான தமிழும் அதன் சொந்தக்காரர்களான தமிழ் மக்கள் வாழும் அளவும் பன்மொழிப் புலவர் சுவாமி ஞானப்பிரகாசரின் நாமம் ஓயாத அலையாக எதிரொலிக்கும்.
நன்றி விக்கிபீடியா

0 comments: