பன்முகப்படைப்பாற்றல் கொண்ட சைவத்தமிழ் அறிஞர்

கொழும்புத் தமிழ்ச்சங்கம் - "வாழ்வும் வகிபாகமும்" என்ற தலைப்பில் வெளியிடும் இலங்கைத் தமிழ் அறிஞர் நூல் வரிசையில் சங்கத்தில் வெளியிட இருக்கும்" பண்டிதர் ம.வே.திருஞானசம்பந்தபிள்ளை" அவர்கள் பற்றிய நூல் வெளியீட்டின் சார்பில் பத்மாசோமகாந்தன் எழுதிய இக்கட்டுரை பிரசுரமாகின்றது.
நன்றி : - தினக்குரல்

இலங்கையில் பல்லாண்டுகளுக்கு முன்னரே தமிழும் சைவமும் முகிழ்ந்தெழுந்த யாழ்நகரின் மத்தியிலே ஆறுமுகநாவலரின் பிரசங்கப் பணி ஆரம்பிக்கப்பட்டு விளங்கும் வண்ணார்பண்ணையில் இந்துக் கலவன் தமிழ்ப் பாடசாலை மிகவும் காத்திரமான சமயப் பிரசங்கங்கள், தமிழ் உரையரங்குகளின் மையமாகத்திகழ்ந்தது. தமிழ் நாட்டிலிருந்தும் இலங்கையின் நாலாபக்கங்களிலுமிருந்தும் பண்டிதர்கள், வித்துவான்கள், புலவர்கள் அறிஞர்களென பற்பல துறை சார்ந்தவர்களும் தமது எண்ணங்களையும், திறமைகளையும், கருத்துகளையும் குவிக்கும் களமாக அப்பாடசாலை மேடையும் மண்டபமும் அமைந்திருந்தன.

அந்த மேடையிலே அடிக்கடி தோன்றி பல அறிஞர்களை அறிமுகப்படுத்தியும், தலைமைதாங்கியும், நன்றி நவின்றும் தமிழ்ப்பணிக்கே தன்னைக் கரைத்துக் கொண்ட பெரியார் மட்டுவிலைச் சேர்ந்த வேதப்பிள்ளையவர்களின் சிரேஷ்ட புதல்வன் ம.வே.திருஞானசம்பந்தபிள்ளை பிரபல சட்டத்தரணியாக விளங்கிய திரு.வே.மாணிக்கவாசகர் இவரது சகோதரரே. இவரது சகோதரர்களுள் மிக இளையவரான பண்டிதர் வே.மகாலிங்கசிவம் கோப்பாய் அரசினர் ஆசிரிய கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். இவர்களுடைய தந்தையார் மட்டுவில் உரையாசிரியர் வேற்பிள்ளையவர்கள் ஆறுமுகநாவலரின் மாணாக்கர் என அறிகிறோம். இவரே சிலகாலம் நாவலர் பெருமான் சிதம்பரத்தில் ஸ்தாபித்து வைத்த சைவப்பிரகாச வித்தியாசாலைக்கு அதிபராக நியமனம் பெற்றுச் சிறப்பாகக் கடமைகளை ஆற்றினார். `தந்தை எவ்வழி மைந்தர் அவ்வழி' என்ற ரீதியிலே தந்தையாரின் அடியொற்றி மைந்தரும் சிறந்த கல்விமான்களாக விளங்கிய பெருமை பூண்டதே இக் குடும்பம்.

நாவலர் பெருமான் வழியில் தமது வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொண்ட பண்டிதர் திருஞானசம்பந்தர் அவர்களும் மாணவர் பாட நூல்களாக அவர்களுடைய தரத்திற்கேற்றவகையில் பாடங்களைத் தொகுத்து "பாலபாடங்கள்" என்ற தலைப்பில் பதிப்பித்து வெளிக்கொணர்ந்தார். அக்காலத்தில் தமிழ்மொழியைப் பயிலும் மாணவருக்கு இலக்கண, இலக்கிய அடிப்படை அறிவோடிணைந்த இந்நூல்கள் மொழிவளர்ச்சிக்கான வித்தாகத் திகழ்ந்தன. அதேபோல சைவசமயத்தின் வளர்ச்சிக்காக `இந்து சாதனம்' என்ற பத்திரிகையைத் தொடங்கிச் சமயப்பணிபுரிந்தார்.

அக்காலத்தில் வண்ணார்பண்ணையில் புகழ்பூத்த இரு பத்திரிகையாசிரியர்கள் பத்திரிகைத்துறைக்கு தம்மை அர்ப்பணித்திருந்தனர். `இந்து சாதனம்' என்ற பத்திரிகையின் ஆசிரியராகப் பண்டிதர் திருஞானசம்பந்தரும், `தமிழ்மகள்' என்ற பத்திரிகையின் பணியை அலங்கரித்தவர் திருமதி மங்களம்மாள் மாசிலாமணி அவர்களும் ஆவர். மங்களம்மாள் ஒரு முன்னோடிப் பெண் பத்திரிகையாளராகத் திகழ்ந்ததோடு காந்தீய சேவைக்கும் சமூக சேவைக்கும் தம்மை அர்ப்பணித்துக் கொண்டார். ஆனால் பண்டிதர் அவர்கள் யாழ் பெருமைமிக்க பழம் இந்துக்கல்லூரியில் தமிழ் கற்பிக்கும் ஆசானாகவும் பல்லாண்டு காலம் பணிபுரிந்தார்.

எள்ளலும், நகைச்சுவையும் கூடிய கருத்தாழமும் காத்திரமுமான இவரது சொல்லாட்சிமிக்க சொற்பொழிவுகளைப் பலமுறையும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் வித்தையையும் கரைகண்ட வித்தகரே பண்டிதரவர்கள். `நாயினுக்கடியேன்' என அவர் ஆரம்பிக்கும் உரைகளோவு அவரது தோற்றமும் மிக மிக எளிமையாகவே காட்சி தரும்.

சைவத் தமிழ்பொலிவு பளிச்சிட துகில் வீசும் வெள்ளைவேஷ்டி, சிலவேளைகளில் அரைக்கை மேற்சட்டை, இன்றேல் காந்தீயப் போக்கில் மேலுடம்பில் ஒரு துண்டு, அகன்ற நெற்றியில் மூன்று குறிகளுடனான திருநீற்றுப் பூச்சு. அதன் மேல் வட்டவடிவமாக சந்தனப்பொட்டு. அதன் மீது குங்குமமும் அழகாக உட்கார்ந்திருக்கும். `பாகவதர்' பாணியிலான நீண்ட தலைமுடியும், அறிவுததும்பும் கண்களும் துள்ளுமீசையும் மேலும் அவருக்கு அழகூட்டுவன.

நாவலர் மரபில் தந்தையின் அடியையொற்றி நூல்கள் பல ஆக்கியும் அரிச்சந்திரபுராணம் - மயானகாண்டம், நளவெண்பா -கலிநீங்குகாண்டம், சிவராத்திரி மான்மியம், மயூரகிரிபுராண உரை என உரையெழுதியமை இவரது பணியில் குறிப்பிடக்கூடிய சிலவாகும். இவ்வுரை நூல்கள் அன்று எஸ்.எஸ்.சி.வகுப்பின் இலக்கிய நூல்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இவரது அறிவாற்றல் பட்டை தீட்டப்பெற்ற பல பரிமாணங்களாக பத்திரிகையாசிரியர், உரையாசிரியர், நூலாசிரியர்,சமயப் பிரசங்கி, சமூக சேவையாளர்,போதனா ஆசிரியர் என்பவற்றோடு நவீன இலக்கியத்திலும் குறிப்பிடக்கூடியளவு பல ஆக்கங்களுக்குத் கர்த்தாவாகப் பிரகாசிக்கின்றது. இவர் சிறுகதைகள், தொடர்கதைகள்,பல கற்பனைக் கட்டுரைகள் என்பவற்றையும் ஆக்கி இலக்கிய ஆர்வத்தை ரசனையை வளர்த்ததோடு பல சமூக சீர்திருத்தக் கருத்துகளையும் அதனுள் புகுத்தி மக்களை விழிப்படையைச் செய்யும் பணியிலும் ஈடுபட்டது இவரது சமுதாயப்பற்றினையும் அதனைச் சீர்திருத்திக் காண அவாவுறும் தன்மையையும் தொட்டுக் காட்டுகிறது. தன்னையும் தன்னைச் சூழ்ந்துள்ள மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகள் துன்பங்கள்,சிக்கல்கள், மூடபக்தி, முரண்பாடு என பல நிலைகளையும் சுட்டிக்காட்டிச் சிந்திக்கத்தூண்டுவனவாக இவரது ஆக்கங்கள் அமைந்துள்ளன. இவர் நடத்திய பத்திரிகை `இந்துசாதனம்' இவற்றிற்குத் தளமாக அமைந்தது.

அதில் வாராவாரம் வெளிவந்த, துரைரத்தினம் - நேசமணி கோபால் நேசரத்தினம், காசிநாதன் நேசமலர் என்பன அக்கால வாசகர்களுக்கு ஆர்வத்தையும் அறிவையும் தூண்டும் படைப்புகளாக ஆக்கிய பெருமை பண்டிதரையே சாரும். அவருடைய எழுத்து நடையில் நக்கலும் நையாண்டியும் கூட கருத்துள்ளதாக யோசிக்கவே வைக்கும் தன்மையன. இவர் பெண்களைப் பற்றி இந்துசாதனம் பத்திராதிபர் குறிப்பாக இந்நாவல்களை மையமாக வைத்து இப்படி எழுதுகிறார்.

"ஒரு சாதியாரின் பழைய சீர்திருத்தத்தையும் புராதன பழக்கவழக்கங்களையும் மகத்துவத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்து வளர்ப்பவர்கள் பிரதானமாகப் பெண்பாலினரேயாவரென அறிவுடையோர் கூறுகின்றனர்." என்ற இவருடைய கருத்து பெண்ணினத்தைப் போற்றியும் புகழ்ந்துமே குறிப்பிடுவதோடு குடும்பத்தின் விளக்காகவே பெண்களை இவர் அவதானிக்கும் பண்பும் புலனாகிறது. சைவம் தழைக்கவும் எழுச்சிபெறவும் உழைத்த இப்பெரியாரின் ஆக்கங்களிலே சைவசித்தாந்த உண்மைகளின் பொருண்மைகளும் இரண்டறக் கலந்திருப்பதாக அறிஞர்கள் குறிப்பிடுவர். சான்றாக பெரும் கடல் அலை அள்ளி வந்து கரையில் தள்ளிய நண்டுகளைப் பின்னர் ஒரு பெருந்திரைவந்து கரையில் மோதி மீண்டுபோகும்போது அள்ளிக்கொண்டு கடலுட் செல்லுதல் வினைகளையனுபவிக்கும்படி ஆன்மாவைப் பிறந்திறந்துழலவிட்ட இறைவன், இருவினையொப்பு மல பரிபாகமென்னுமிவைகளை அவ்வான்மா அடையுங்காலத்து அந்த இறைவனே அவ்வான்மாக்களை மார்ச்சார சம்பந்தமாய் (பூனைக் குட்டிகளைக் கௌவிச் செல்வதுபோல) வந்துஅடிமை கொள்வதை ஞாபகப்படுத்தியது. இது பண்டிதர் ஐயாவுடைய எழுத்து நடைச் சிறப்பின் சிலவரிகளே.

கருத்தாழமும் சிந்தனை செறிந்த சித்திரிப்புமான இவர் படைப்புகளில் நவீன இலக்கியத்தில் ஒரு சிறுகதையை வகைக்கு எடுத்துப் பார்த்தால் அதன் தலைப்பு `ஓம் நான் சொல்லுகின்றேன்' என்பது முத்தன் என்றொரு ஏழைச் சிறுவன் தனது கடும் உழைப்பாலும் அயரா முயற்சியாலும் முன்னேறிப் பெரும் புள்ளியாக மிளிருகின்றான். அவனது பணத்திற்கும் பெருமைக்கும் அடிமையாகிவிட்ட சமூகம் அவனை ஏதாவது அந்த ஏழை, அநாதை முத்தனை `முத்து', `முத்துக்குமாரு' என்றும் பின்னர் முத்துக்குமாரசுவாமி, முத்துக்குமார சுவாமிப்பிள்ளை என்றெல்லாம் மரியாதையோடு அழைத்து வணங்கித் தம்மையும் இனங்காட்டுகின்றனர். இதனை அவதானித்த முத்தன் இம்மரியாதையெல்லாம் உண்மையில் தனக்கல்ல, தான் இயந்திரமாகக் கஷ்டப்பட்டு உழைத்த பணப்பெட்டிக்கே என்பதைப் புரிந்துகொண்டு தனக்கு மரியாதை செய்வோருக்கெல்லாம் ஓம் நான் சொல்கிறேன் எனப் பதிலிறுளிப்பானாம். அதாவது இம் மேன்மையெல்லாம் எனக்கல்லவே எனது பணப் பெட்டிக்கே என்ற பொருள்படவே கூறிவைப்பானாம். பண்டிதர் ஐயாவினுடைய எள்ளலும், நகைச்சுவையும் பணத்திற்கு மக்கள் முண்டியடித்துக்கொண்டு நல்கும் மரியாதையையும் போலி மனப்பாங்கையும் விளக்க தனது அழகு தமிழிலே கருத்தாளம் மிக்க படைப்பாக ஆக்கியுள்ளபெருமையே பெருமை!

இத்தகைய படைப்பாற்றலும், சமுதாய உணர்வும் சீர்திருத்த மனப்பாங்கும் சைவத்தமிழ் பண்பாடும் அறிவாழமும் மிக்க நாவலர் பெருமானை அடியொற்றிவாழ்ந்த பத்திராதிபருமான பண்டிதர் திருஞானசம்பந்தபிள்ளை எமது பக்கத்துவீட்டுக்காரர் அயலவர் எமது தந்தையாரது நட்பைக் கொள்ளை கொண்டவர். எமது குடும்ப நண்பர் என்றெல்லாம் எண்ணிப் பார்க்கும்போது இவர்பற்றிய பெருமை இன்னுமின்னும் உயர்ந்து நிற்கின்றது. இவரது கடைசிச் செல்லமகள் `செல்வமகள்' இராஜேஸ்வரி தற்போது திருவாட்டி இராஜேஸ்வரி ஜெகானந்த குருவும் நானும் ஒருசாலை மாணாக்கிகள். சிறுமிகளாக இருந்தபோது பண்டிதர் ஐயாவுடைய பிரசங்கம் இந்துக் கலவன் பாடசாலையில் நடைபெறும் காலைக் கூட்டத்தின் மத்தியில் சத்தமிட்டும் ஓடித்திரிந்தும் குழப்பியபோது பண்டிதரிடம் ஏச்சும்வாங்கிய நாட்களையும் நினைத்துப் பார்க்கிறேன். அத்தகைய பெருமையும் எமக்குண்டு.

உலகம் பலவிதம் என்ற உண்மையைப் புரிந்துகொண்டு புகழொடு தோன்றித் தமிழ் சைவத் தொண்டிற்காகப் பல உயர்ந்த பண்புகளுடன் நாவலர் மரபில் நல்வாழ்வு வாழ்ந்து வழிகாட்டிய அறிஞர் மட்டுவில் வேற்பிள்ளை திருஞானசம்பந்தபிள்ளை பண்டிதர் அவர்கள் யாழ்ப்பாணம் பெற்றெடுத்த அறிஞர் வரிசையில் முன்னிடம் வகிப்பவர். வாழ்க அவர் திருநாமம்!
பத்மா சோமகாந்தன்

சில்லையூர் செல்வராசன் நினைவுதினம்


சில்லையூர் செல்வராசன் (சில்லாலை, யாழ்ப்பாணம்) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை , நாடகம், வானொலி நாடகம், மொழிபெயர்ப்பு , விளம்பரம் எனப் பரவலான பங்களிப்புச் செய்தவர். தான் பிறந்த ஊரின் பெயரை முதல் நிலைப்படுத்தி தனது பெயரை சில்லையூர் செல்வராஜன் எனச் சூடிக்கொண்டார். இவரது 12 வது நினைவுதினம் 10. 14. 1995. ஆகும்
மேலும் புகைப்படங்கள் இங்கே -->>